கடம்ப மரங்கள் சூழ்ந்த இடமாதலால் இத்தலத்திற்கு 'கடம்பூர்' என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயில் 'மேலைக்கடம்பூர்' என்றும், இவ்வூரின் கீழ்ப்புறத்தே மற்றொரு கோயில் உள்ளதால் அது 'கீழக்கடம்பூர்' என்றும் அழைக்கப்படுகிறது. இது தேவார வைப்புத் தலம். இந்திரன் இக்கோயிலை தனது கரத்தால் அகழ்ந்து தேவலோகத்திற்குக் கொண்டு போக முயன்றதால் 'கரக்கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் அமிர்தகடேஸ்வரர் என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அமுதகடேசர் என்றும் போற்றப்படுகின்றார். அம்பிகை 'சோதி மின்னம்மை' என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள்.
இந்திரன் இக்கோயிலை எடுத்துச் செல்ல முற்படும்போது விநாயகரை வழிபட மறந்ததால் அவர் கால் பெருவிரலால் தேரை அழுத்தினார். தேர் நின்று விட்டது. அதனால் மூலஸ்தானம் தேர் போன்ற அமைப்புடன், குதிரை இழுத்துச் செல்வதுபோல் சிறந்த முறையில் சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது. தேரை அழுத்தியதால் இக்கோயிலில் விநாயகர் தனது காலை ஊன்றிய நிலையில் காட்சி தருகின்றார்.
பிரகாரத்தில் மகாலட்சுமி, பாபஹரேஸ்வரர், ஐயனார், கருடன், காலபைரவர், ரிஷபாருடர், இந்திரன், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் மற்றும் கடம்பவன காளி சன்னதிகள் உள்ளன. வள்ளலார், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.
இக்கோயிலில் உள்ள கடம்பவனத்தில் கடம்பவனேஸ்வரர் தரிசனம் தருகின்றார். இவரை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.
முருகப் பெருமான் இங்கு வந்து வழிபட்டு சூரபத்மனை அழிப்பதற்கு வில் பெற்ற தலம். இத்தலத்து முருகன் ஆறுமுகப் பெருமானாக தரிசனம் அளிக்கின்றார்.
பங்குனி மாதம் 3 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் காலை 6 மணிக்கு சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும் சூரிய பூஜை நடைபெறுகிறது.
இக்கோயிலின் தீர்த்தமான சக்தி தீர்த்தம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இறந்தவர்களின் அஸ்தியை கடலில் கரைப்பது போல் இப்பகுதி மக்கள் மிகவும் சக்தி வாய்ந்த இந்த குளத்தில் அஸ்தியைக் கரைக்கின்றனர்.
இந்திரன் இங்கு வந்து வழிபட்டு அமிர்த கலசம் பெற்றார். அங்காரகனும் (செவ்வாய்) இத்தலத்து பெருமானை வழிபட்டுள்ளார். சிவகணங்கள் பூஜை செய்த தலம்.
1000 ஆண்டுகள் பழமையான தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தியை பிரதோஷ காலத்தில் இங்கு தரிசிக்கலாம். இந்த அற்புத மூர்த்தி வேறு எங்கும் காணக்கிடைக்காதது. இக்கோயில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கல்லாலான சிறந்த சிற்பங்கள் கலைக்கருவூலமாக விளங்குகின்றன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|